Wednesday, September 08, 2010 12:42 PM IST
Click
தலையங்கம்
தலையங்கம்: ஏற்றம் தரும் மாற்றம்

First Published : 22 Jul 2010 12:29:31 AM IST

Last Updated : 22 Jul 2010 02:15:12 AM IST

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு'வதால், சர்வதேச அளவில் கடல்வழி வர்த்தகத்தின் பங்கு ஏறத்தாழ 70 விழுக்காடு என்பது வியப்பில் ஆழ்த்தும் தகவலாக இருக்காது. கடல்வழி வர்த்தகம்தான் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையே நிர்ணயிக்கிறது எனும்போது, எந்த ஒரு நாடும் அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கிக் கொள்வது அவசியம்.

கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்ட தங்க நாற்கரசாலைத் திட்டத்தின் நோக்கமே பெருநகரங்களுக்கும் துறைமுகங்களுக்குமான சரக்குப் பரிமாற்றங்களை விரைவுபடுத்துவதுதான். இதன் விளைவாக, இப்போது சாலைகளில் முன்பு கனவிலும் நினைத்துப் பார்க்காத பல ராட்சத வாகனங்கள் ஏற்றுமதிக்கான கண்டெய்னர்களை ஏற்றிச்செல்வது அன்றாட நிகழ்வாகிவிட்டிருக்கிறது.

இவை மட்டுமே சர்வதேசக் கடல்வழி வாணிபத்துக்குப் போதாது. அதிக அளவில் ஏற்றுமதி, இறக்குமதியை எதிர்கொள்ளவும், ஒரு சிறு நகரமே அசைந்து வருவதுபோன்ற அளவில் உள்ள பெரிய கப்பல்களை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தவும் சரக்குகளை இறக்கவும், ஏற்றவும் வசதியுடைய மேடைகள் அமைந்த நவீன துறைமுகங்கள் இன்றியமையாத் தேவையாக இருக்கின்றன.

ஏறத்தாழ 7,500 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையை உடைய இந்தியாவில் இப்போது 12 பெரிய துறைமுகங்கள் உள்ளன. இவற்றில் எண்ணூர் தவிர ஏனைய துறைமுகங்கள் அனைத்தும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் துறைமுகப் பொறுப்புக் கழகங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. எண்ணூர் துறைமுகம், சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் ஒரு பங்குதாரராக உள்ள அரசுத்துறை நிறுவனமாக இயங்கி வருகிறது. இப்போது ஏனைய பெரிய துறைமுகங்களையும் அரசுத்துறை நிறுவனங்களாக மாற்ற அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

மேலே குறிப்பிட்ட  துறைமுகங்கள் அல்லாமல், இந்தியா முழுவதிலுமாக 187 சிறிய துறைமுகங்கள் உள்ளன. இவற்றில் பல செயல்படாமல் இருக்கின்றன என்றாலும் வருங்காலத்தில் பன்னாட்டு வர்த்தகம் அதிகரிக்கும்போது, அவற்றின் திறனுக்கேற்ப பல அளவுகளில் துறைமுகங்கள் அமைத்து விரிவாக்கம் பெறவும் வாய்ப்புக் காணப்படுகிறது. சில சிறிய துறைமுகங்கள் தனியார் துறைமுகங்களாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

2012-ம் ஆண்டுக்குள் ஏறத்தாழ 1,200 மில்லியன் டன்கள் அளவிலான இறக்குமதி, ஏற்றுமதி இந்தியத் துறைமுகங்களால் கையாளப்பட வேண்டிய நிலையில், துறைமுக மேம்பாடும் அரசுத்துறை நிறுவனங்களாக இயங்க இருக்கும் துறைமுகங்களுக்குள் வியாபாரப் போட்டியும் ஏற்பட்டால் மட்டுமே வர்த்தகம் செழிக்க வழிகோல முடியும்.

இந்தியத் துறைமுகங்களின் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கும் நோக்குடன் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தேசிய கடல்சார் மேம்பாட்டுத் திட்டம், முதல் முயற்சியாக துறைமுகங்களை அரசின் நேரடி நிர்வாகத்திலிருந்து பிரித்து எண்ணூரில் அமைந்திருப்பதுபோல தனித்தனியான அரசுசார் நிறுவனங்களாக மாற்ற உத்தேசித்திருக்கிறது.

இந்த அரசு நிறுவனங்களில் பொதுமக்களின் பங்குகளும் தனியார் முதலீட்டாளர்கள் இயக்குநர்களாக இருக்கவும் வகை செய்யப்படும் என்று தெரிகிறது. இதன்மூலம் அன்னிய முதலீட்டை எதிர்பார்க்காமல் துறைமுக மேம்பாட்டுக்கு வழிகோலுவது இயலும். இத்தகைய துறைமுகங்களைப் பயன்படுத்தும் ஏற்றுமதியாளர்கள் மற்றும் கப்பல் உரிமையாளர்கள் சங்கத்தினரும் இதில் பங்குதாரராக இருக்க வழியேற்படும் என்றால், அவர்களால் இந்தத் துறைமுகங்களைத் திறம்பட நிர்வகிக்கவும், ஊழல்கள் நடந்தால் வெளிப்படுத்தவும், தடுக்கவும் முடியும்.

தற்போது அதிகாரிகள்தான் இந்தத் துறைமுகங்களின் எந்த நடவடிக்கையையும் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். கப்பல்கள் எத்தனை நாள் துறைமுகத்துக்குள் நிற்கலாம், காலம் கடந்தால் அபராதம், காலஅவகாசத்தை மீறி சரக்குகள் தேங்கினால் விதிக்கப்படும் அபராதம் ஆகியவற்றை வசூலிக்கவும், அல்லது ரத்து செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளதால், துறைமுகங்களில் அரசு உயர் அதிகாரிகளின் ஊழல் ஒரு நாளைக்கு பல கோடி ரூபாய் என்பதாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில், அத்தொழிலில் தொடர்புடையவர்களையே பங்குதாரர்களாக ஆக்கும்போது, ஒரு சுயகட்டுப்பாடு தானே அமையும்.

வசதிகளுடன் கூடிய துறைமுகங்கள் அமைந்தால் மட்டும் போதாது. நவீன கட்டமைப்பு வசதிகளுடன் தொழில்நுட்பமும் தொழில்நுட்பத்தைக் கையாளும் திறமை படைத்த மனிதவளமும்கூட துறைமுக மேம்பாட்டின் இன்றியமையாத தேவைகள். தற்போது கடல்சார் கல்வி பயிலும் பலரும் வெளிநாடுகளுக்கே அதிகமாகச் செல்லும் நிலைமை உள்ளது. இதை மாற்றியாக வேண்டும்.

துறைமுகங்களில் மட்டுமே காணப்படும் ராட்சத பளுதூக்கி இயந்திரங்களை  இயக்குபவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிக்கென தனிபடிப்புகள் அயல்நாடுகளில் இருக்கின்றன. துறைமுக நிர்வாகம் என்கிற பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாமும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றபடி துறைமுகங்களின் தரத்தை உயர்த்துவதோடு  துறைமுக நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பம் தெரிந்த பணியாளர்களைத் தயாராக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியத் துறைமுகங்களில் ஊழலை அகற்றி கட்டணங்களைக் குறைத்து கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி சர்வதேச அளவிலான கப்பல்களின் வருகையை அதிகரிக்க முற்படும் நேரத்தில், நமது பார்வை தேசப்பாதுகாப்பிலும் இருப்பது அவசியம். காலங்காலமாக அன்னியப் படையெடுப்புகள் கடல் மூலம்தான் நடந்திருக்கின்றன - அண்மையில் நடந்த மும்பை தாக்குதல் உள்பட - என்பதையும் நாம் கருத்தில்கொண்டு செயல்பட்டாக வேண்டும்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்